முத்துப்பேட்டையில் மீண்டும் மதக்கலவரத்தை தூண்டச் சதி - விழித்துக் கொள்ளுமா காவல்துறை?
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரில் தொடர்ந்து இந்துத் துவாவினர் மதக்கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களின் சொத் துக்களை சூறையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விநாயகர் ஊர்வலங்களை கலவரத்திற்குக் காரணியாகப் பயன்படுத்தி வந்தனர்.
முஸ்லிம்கள் வாழும் குறுகலான தெருக்களில் பல பள்ளிவாசல்களைக் கடந்து செல்லும் வகையில் ஊர்வலப் பாதை அமைந்து இருப்பது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவது திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது.
இதனைத் தடுக்கும் விதமாக ஊர்வலத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்வதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விநாயகர் ஊர்வலத்திற்கான மாற்றுப் பாதையை மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்குமாறு தீர்ப்பு வழங்கியது.
விநாயகர் ஊர்வலத்தைப் பேட்டை ரோட்டிற்குள் கொண்டு செல்லாமல் பட்டுக்கோட்டை ரோட்டிற்குள் கொண்டு சென்றதால் பெரும் கலவரம் தவிர்க்கப்பட்டது. காவல்துறையின் கடும் பாதுகாப்பினால் கலவரத்திற்காக இந்துத்துவாவினர் செய்த முஸ்தீபுகள் முறியடிக்கப்பட்டன.
இதனால் ஏமாற்றமடைந்த இந்துத்துவாவினர் தங்களின் அடுத்த நடவடிக்கைக்குத் தருணம் பார்த்து வந்தனர். முஸ்லிம் இயக்கத்தினர் நடத்திய கூட்டத் தில் தங்களை தாக் கிப் பேசியதா கக் கூறி இந்துத் துவா வினர் போட்டிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
உடனடியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை சார்பாக, பிஜேபியினர் நடத்தும் கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகவோ, வரம்பு மீறியோ பேசுவதற்குத் தடை செய்யுமாறு புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் முஸ்லிம்கள் குறித்து தரக் குறைவாக பேசப்பட்டபோதும் காவல்துறையினர் எந்த நடவடிக்கை யும் எடுக்காமல், அமைதி காத்ததோடு மட்டுமல்லாமல் முஸ்லிம் இயக் கத்தினர் மீது மட்டும் பிஜேபியினரை தரக்குறைவாக பேசியதாக வழக் குத் தொடர்ந்தனர்.
முத்துப்பேட்டை காவல்துறையினரின் இந்த நடவடிக்கை காரணமாக தைரியமடைந்த இந்துத்துவாவினர் தங்களின் அடுத்த நடவடிக்கைக்கு அச்சாரம் போட்டனர்.
பிஜேபியின் மாவட்ட நிர்வாகி பேட்டை சிவா, தன்னுடைய காரின் மீது யாரோ கல்லெறிந்ததாக கூறி அதற்கு வழக்குத் தொடருமாறு முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் பிரச்சினை செய்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பேட்டை சிவாவை பாதுகாப்பாக வீடு வரை கொண்டு சேர்த்தனர். இருந்தபோதிலும் சிவாவின் ஆதரவாளர்களால் பேட்டை ரோட்டில் வசித்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் குமார் அபிநவின் துரித நடவடிக்கையால் உயிர்சேதமில்லாமலும், கலவரம் பரவாமலும் தடுக்கப்பட்டது.
இதனையடுத்து கருப்பு (எ) முருகானந்தம் தலைமையில் அக்கம் பக்கத்து கிராமத்தினர் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நமக்கு எதிராக உள்ள சமுதாயத்தினரின் நல்லது கெட்டதுக்கு போகக் கூடாது. அந்த சமுதாயத்தினரின் வீட்டு வேலைக்கும், கடைகளுக்கும் செல்லக் கூடாது. இந்த முடிவை அனைத்து கிராமத் தலைவர்களுக்கும் தெரிவித்து கடைபிடிக்கச் சொல்வது, மீறி நடப்பவர்களை ஒதுக்கி வைப்பது என்றெல்லாம் கூட்டத்தில் தீர்மானங்கள் போடப்பட்டன. இந்த தீர்மானங்கள் பற்றிய விவரங்கள் எல்லாச் செய்தித் தாள்களிலும் வெளிவந்தன.
இந்திய ஒருமைப்பாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானங்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம்கள் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இருந்த போதிலும் இந்த விஷயத்தை காவல் துறையினர் ஏனோ கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.
இதனால் தைரியமடைந்த இந்துத்துவாவினர் இந்துக்கள் பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் மதவெறியைத் தூண்டும் வகையில் பிட் நோட்டீஸ்களை முத்துப்பேட்டையைச் சுற்றி விநியோகித்து வருகின்றனர்.
முஸ்லிம் பகுதியில் வேலைக்கு வருபவர்களை வேலைக்குச் செல்லவிடாமல் மிரட்டி தடுத்து வருகின்றனர். மேலும் இந்துக்கள் பகுதியில் ஆட்டோ ஓட்டிச் செல்லும் முஸ்லிம் ஆட்டோ டிரைவர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்வுகள் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் ஆட்டோ டிரைவர்களும், தலித் அமைப்புகளும் ஜனநாயகப் போராட்டம் நடத்தும் முடிவில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் முத்துப்பேட்டை பகுதியில் பிஜேபியினர் பொதுக் கூட்டம் நடத்தும் ஏற்பாட்டில் இறங்கியுள்ளனர். இக்கூட்டத்தில் பிஜேபியினர் பேசும் பேச்சுக்கள் என்ன விளைவை ஏற்படுத்துமோ என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கூட்டத்தில் வரம்பு மீறி பேசுவதைத் தடுக்குமாறு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சமுதாய மக்களை இன்னொரு சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிக்கு செல்வதைத் தடுப்பதும், வேலைக்குச் செல்வதைத் தடுப்பதும் ஜனநாயக விரோதச் செயல்களாகும். இம்மாதிரி ஜனநாயக விரோதச் செயல்கள் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி இந்திய ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கும் இந்த ஜனநாயக விரோதச் செயல்களைத் தடுப்பது காவல்துறையினரின் கடமை. காவல்துறையினர் இதனை செவ்வனே நிறைவேற்றுவது தான் இப்பகுதியில் அமைதிக்கு வழிவகுக்கும். இதுதான் இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
- ஸாலியா மைந்தன்.
Highlights: 1
முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் அருகே நடைபெற உள்ள பிஜேபியின் பொதுக் கூட்டத்திற்காக முதல் நாள் இரவு ஆசாத் நகர் பகுதியில் பிஜேபி கொடிகள் நாட்ப்பட்டது. இரவு நேரத்தில் நாட்டப்படும் கொடிக் கம்பங்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதுவே கலவரத்திற்கு வழிவகுத்து விடும் என்பதால் பகல் நேரத்தில் கொடிக் கம்பங்களை நாட்டும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொள்ளாமல் கொடிக் கம்பங்கள் வைப்பதை முஸ்லிம்கள் தடுப்பதாக கூறி பிஜேபியினர் சாலை மறியல் செய்தனர். இதனால் காவல்துறையினர் முஸ்லிம்கள் நால்வரைக் கைதுசெய்தனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் காவல்துறையினரிடம் பேசியதில் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Highlights:2
இந்துக்கள் பகுதியில் முஸ்லிம்களின் ஆட்டோக்கள் அனுமதிக்கப்படாதது குறித்து ஆட்டோ சங்கத் தலைவர் எஸ்.எஸ். பாக்கர் அலியிடம் கேட்டபோது, "இஸ்லாமியர்களின் ஆட்டோக்கள் இந்துக்கள் பகுதியில் வரக்கூடாது என்று தீர்மானம் போடப்பட்டு ஆட்டோக்கள் தடுக்கப்பட்டன. இது குறித்து காவல்துறையில் புகார் செய்தோம். காவல்துறையினர் மெத்தனமாக இருந்ததால் ஆட்டோ சங்கத்தினர் சார்பாக உண்ணா விரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து எங்களை (ஆட்டோ சங்கத்தினர்) அழைத்துப் பேசிய மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஆட்டோக்களை மறித்த இரண்டு பேரை கைது செய்துள்ளோம்.
மேலும் ஒருவரை தேடி வருகிறோம். இனி எவரேனும் ஆட்டோக்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று எஸ்.பி. உறுதி அளித்ததன் பேரில் உண்ணா விரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
Highlights: 3
கடைசிக் கட்ட செய்தி
திங்கட் கிழமை மாலை பிஜேபி கூட்டம் நடக்க உள்ள நிலையில் ஞாயிற்றுக் கிழமை இரவு மொய்தீன் பள்ளிவாசல் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திமுக கவுன்சிலர் ஜபருல்லாஹ்வின் ஆட்டோ மர்மக் கும்பலால் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது அப்பகுதியில் டென்ஷனை அதிகரித்துள்ளது.


